Ad Widget

போர்க்குற்ற அறிக்கையை வலுப்படுத்த ஐ.நா. மனிதஉரிமைகள் உப மாநாடுகளில் பங்குபற்ற கூட்டமைப்பு முடிவு!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை அறிக்கையை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்காமல் செப்டெம்பர் மாத அமர்வு வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் – ஹுசைன் ஒத்திவைத்துள்ள நிலையில், அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 28ஆவது அமர்வு நடைபெறும்போது அங்கு நடைபெறவுள்ள உப மாநாடுகளில் பங்குபற்றி தமிழ் மக்களின் நீதிக்காக கூட்டமைப்பு குரல் கொடுக்கவுள்ளது.

இதற்காக மார்ச் மாதம் முதல் வாரத்தில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபைகளின் உறுப்பினர்கள் ஜெனிவா நோக்கிப் புறப்படவுள்ளனர்.

இவர்கள், வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ‘தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலை’ என்ற தலைப்பிலான தீர்மானம் குறித்தும், இந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் தொடர்பிலும் ஜெனிவா உப மாநாடுகளில் விளக்கமளிக்கவுள்ளனர்.

ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் ஜெனிவாவில் இவர்கள் சந்தித்து தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளனர்.

அத்துடன், செப்டெம்பர் மாத அமர்வில் இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை ஜெனிவாவில் சமர்ப்பிக்கும்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில், மேற்படி தீர்மானங்களையும் உள்ளடக்கவேண்டும் எனவும் கூட்டமைப்பினர் கோரவுள்ளனர்.

அதேவேளை, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை மீதான ஐ.நாவின் சர்வதேச விசாரணை தமிழர்களுக்கு நீதியை வழங்குவதுடன் அரசியல் தீர்வையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவாவில் வலியுறுத்தவுள்ளனர் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Related Posts