Ad Widget

போர்க்கால நடவடிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டில் மீண்டும் தலைதூக்கி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டிய அபேராமையில் அமைந்துள்ள சுசரித்த தம்மா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு குற்றவாளிகளால் எந்தவித தீங்கும் நிகழ்வதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தம்மா அறநெறிப் பாடசாலைகள் ஊடாக வழங்கப்படும் வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவது இன்றியமையாதது எனவும் அவர் கூறினார். பௌத்த தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த நாட்டை சிறந்த ஒரு நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும், உலகிலுள்ள பல நாடுகள் பௌதீக அபிவிருத்தியில் வளர்ச்சியடைந்திருக்கின்ற போதிலும் ஆன்மிக ரீதியிலான சந்தோஷங்கள் அம்மக்களிடையே மிகவும் குறைவாகவே உள்ளன.

இதன் காரணமாக தற்காலத்தில் பௌத்த தர்மங்களை நடைமுறைப்படுத்தும் போக்கு அந்நாடுகளில் ஏற்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்த தர்மமானது நாட்டின் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு செல்வாக்குச் செலுத்தும் மிகச்சிறந்த உதாரணமாக காணப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரி மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது தம்மா பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார். வண. வெலமித்தியவே குசல தம்மா தேரர், வண முருத்தெட்டுவ ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, தயா கமகே மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts