Ad Widget

போரில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் கையூட்டு கேட்டதாக புகார்

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது அமைப்புக்களிடம் கருத்துக்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இதற்காக நடத்தப்பட்ட அமர்வொன்றில் காணாமல் போயுள்ள தமது உறவுகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளின் போது, தங்களிடம் கையூட்டாக பணம் கோரப்பட்டதாகவும், பணம் இல்லாத நிலையில் பாலியல் கையூட்டு கோரப்பட்டதாகவும் காணாமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக ஸ்றீன் ஸரூர் கூறியுள்ளார்.

இத்தகைய சுமார் 300 பெண்களிடம், அவர்கள், காணாமல் போயுள்ள தமது உறவுகளைத் தேடிக் கண்டறிய முற்பட்ட போது எதிர்நோக்கிய சவால்கள் குறித்த தகவல்களைத் தங்களிடம் கூறியதாகவும், அதில் ஒரு விடயமாக இவ்வாறு கையூட்டு கோரப்பட்டமை தொடர்பான விவரங்களும் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக ஸ்ரீன் ஸரூர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அரச படையினரின் புலானய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் மீதும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்றார் ஸரூர்.

அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் இவ்வாறு பெறப்பட்ட கையூட்டு பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாலியல் கையூட்டு கோரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தமது விண்ணப்பத்தில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினர் கோரியிருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சம் மற்றும் சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினரிடமோ அல்லது மனித உரிமைகள் அமைப்புக்களிடமோ முறையிடவில்லை.

இந்தத் தகவலைப் பெற்றுக்கொண்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பானது, இது குறித்து அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளது என அந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் கூறினார்.

Related Posts