Ad Widget

போரில் உயிர்நீத்த உறவினர்களை நினைவு கூரலாம் மாவீரா்களை அல்ல

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது எனஅரசாங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த முறை முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தினத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பதை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்றய தினம் பகல் நடைபெற்றது.

மாவீரர் தின வாரம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் வடமாகாணத்தில் பாதுகாப்பு ஏற்பாடு களும் கண்காணிப்புக்களும் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது கருத்து வெளியிட்டார்.

“யுத்தத்தின்போது தமிழ் மக்கள் பலர் பலியாகினார்கள். எனவே உயிர்நீத்த மக்களை நினைவு கூருவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை அல்ல, உயிர்நீத்த மக்களையே நினைவுகூருவதாக வடமாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கமும் கூறியிருந்தார். எனவே உயிர்நீத்த மக்களை எந்தப் பெயரைக் கொண்டு நினைவு கூர்ந்தாலும் பிரச்சினையில்லை. அதனை தடுக்கவும் எம்மால் முடியாது.

நடராஜா ரவிராஜின் உருவச் சிலையை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள நான் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன். அப்போது சிவாஜிலிங்கம் மற்றும் அவரைப் போன்ற இனவாதச் சிந்தனையைக் கொண்ட சிலர் அதில் வந்திருந்த போதிலும், குறைந்தபட்சம் முன்னிலை இடத்தைக் கூட ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கவில்லை.

கடந்த முறை மாவீரர் நினைவேந்தலை சிவாஜிலிங்கம் முன்னெடுத்தபோது அதில் 13 பேரே கலந்துகொண்டிருந்தனர். இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பதை பார்க்கத்தானே போகின்றோம். கடந்த தேர்தலின்போது சிவாஜிலிங்கம் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு கிடைத்த வாக்குகள் எத்தனை? இருந்த ஆசனமும் இழப்பதற்கு நேரிட்டது. அதேபோல கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரன் தேர்தலில் வெற்றிபெற்றார். மத்தியஸ்வாத சிந்தனையுடையவர்களையே மக்கள் விரும்புகின்றார்கள். அன்று துப்பாக்கி இருந்ததினால் இவர்களைப் போன்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்” – என்றார்.

இதேவேளை இனப்பிரச்சினைக்கு சமஸ்டியே இறுதித் தீர்வு என்றும், மாவீரர்களை நினைவு கூருவதில் எந்தவித தவறும் இல்லை எனவும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் வினா எழுப்பினர்.

“வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்ற நீதியரசராக பணியாற்றியவரைப் போன்று இன்று செயற்படுவதில்லை. இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் நடத்தைதான் வடக்கு, கிழக்கில் வாக்குகளை சிதறடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே இந்த நாட்டில் தீ பற்றியது. வாக்குகளுக்காக அனைத்துவித கீழ்த்தர அரசியலையும் இந்நாட்டு அரசியல்வாதிகள் செய்தனர். இதனால் ஏற்பட்ட விளைவுகளை அரசியல் தலைவர்கள் அல்ல, அப்பாவி மக்களே எதிர்கொண்டனர்” – என்றார்.

Related Posts