Ad Widget

போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விசேட அதிரடி படையினர்

வடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து செயற்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

police

யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில், யாழில் போதைபொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருட்கள், போதையூட்டப்பட்ட பாக்கு என்பன விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் சமூக பிறழ்வுகள் இடம்பெறுகின்றன. விற்பனை செய்பவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களில் விடுதலையாவதால், அவர்கள் பற்றிய தகவல்களை வழங்க பொதுமக்கள் பயப்படுகின்றனர்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யும் போதைப்பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக பொலிஸார் பாடசாலை ஆரம்பிக்கும் போதும், முடிவடையும் போதும் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என யாழ். பிரதேச செயலாளர் சுகுணவதி தெய்வேந்திரம் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளிக்கும் போதே வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைபொருள் விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினைரை பயன்படுத்த பொலிஸ்மா அதிபர் அனுமதியளித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம். தகவல் தருவோர் பற்றிய ரகசியம் நூறு வீதம் பாதுகாக்கப்படும் என்றார்.

இதேவேளை வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்த 15பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க தெரிவித்தார்.

‘மணற்காட்டு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. பதிவு இல்லாத உழவு இயந்திரங்களில் வருவோரே அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்’ என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் எடுத்துக்கூறிய பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன், ‘உழவு இயந்திரத்தில் பொய்யான இலக்கதகடுகளை பொருத்தி வருகின்றனர். ஒவ்வொரு உழவு இயந்திரங்களிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றார்கள். அவர்களை ஊர்மக்களால் தடுக்க முடியவில்லை’ என்றார்.

அத்துடன், ‘நாளொன்றுக்கு இவ்வாறாக 40 உழவு இயந்திரங்கள் மண் எடுத்துச் செல்கின்றன. அவர்கள் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டிச் செல்வதனால் விபத்துக்களும் அதிகளவில் இடம்பெறுகின்றன. சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தவிசாளர் கோரினார்.

இதற்கு பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், ‘இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்த 15பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும்’ என்று கூறினார்.

Related Posts