Ad Widget

போதைப்பொருளை ஒழிப்பதற்கான யாழ்.மாவட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளில் மேல்நீதிமன்றம் தலையீடு செய்யாது

சமூக நலன்களுக்கு விரோதமாக கலாசார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருளை அடியோடு இல்லாமல் ஒழிப்பதற்காக யாழ்.குடாநாட்டு மாவட்ட நீதிபதிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் அநாவசியமாக மேல் நீதிமன்றம் தலையீடு செய்யமாட்டாது என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

26 கிலோ மற்றும் 141 கிலோ அளவிலான கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமைக்காக, இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள் தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பிணை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் போதே அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தனது உடைமையில் 26 கிலோ கஞ்சாவை வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தின் கட்டளையின் பேரில் நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று 141 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் பருத்தித்துறை நீதிவானின் கட்டளைக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தின் 83 ஆம் பிரிவின் கீழ் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குக்கு மேல் நீதிமன்றில் மட்டுமே பிணை மனு தாக்கல் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் இந்த இரண்டு நபர்களுக்கும் பிணை வழங்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இரண்டு வெவ்வேறு பிணை மனுக்கள் தாக்கல் செய்யபட்டிருந்தன.

இந்த பிணை மனுக்கள் தொடர்பான விசாரணைகள், 29.07.2015 ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றன.

இந்த பிணை மனுக்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறார் எனக் கூறிய அரச சட்டத்தரணி, தனது ஆட்சேபனையை மனு ஒன்றின் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அவகாசம் கோரி, தவணை ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, இந்த பிணை மனுக்கள் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்டவை என்பதுடன், இரண்டு வழக்குகளிலும் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா போதைப் பொருளின் அளவு பிரமாணம் மிக அதிகமானதாகும் என நீதிபதி இளஞ்சசெழியன் சுட்டிக்காட்டிய நீதிபதி – இந்த இரண்டு வழக்குகளிலும் புரியப்பட்டுள்ள குற்றம் பாரதூரமானது. இத்தகைய குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும் என்று சட்டம் பரிந்துரை செய்கின்றது.

ஆனால், யாழ் குடாநாட்டில் போதைப்பொருளை அடியோடு அழிப்பதற்கு யாழ்.குடாநாட்டு மாவட்ட நீதிவான்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். பொலிஸார் துப்பறிந்து பொதுமக்கள் வழங்கும் தகவல்களுடன் போதைப் பொருளை உடைமையில் வைத்திருப்பவர்களைக் கைது செய்கின்றார்கள்.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை மாவட்ட நீதிவான்கள் விளக்கமறியலில் வைத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்கின்றார்கள். அதனால், பாரதூரமான குற்றச்செயல்களான கஞ்சா போதைப் பொருள் வழக்குகளுக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்கி மாவட்ட நீதிமன்றங்களின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கக் கூடாது. போதைப்பொருள்களை இல்லாமல் செய்வதற்காக மாவட்ட நீதிமன்றங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மேல் நீதிமன்றம் உதவியாகவும் உடந்தையாகவும் இருக்க வேண்டுமேயொழிய, உபத்திரமாக இருக்கக் கூடாது.

போதைப்பொருளாகிய கஞ்சா கடத்துதலும், உடைமையில் வைத்திருப்பதுவும், பாரதூரமான சமூகவிரோதக் குற்றச் செயலாகும். மாணவர்கள், இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை நாசப்படுத்துகின்ற குற்றச் செயலுமாகும். எனவே, இக்குற்றங்களுக்கு இலகுவில் பிணை வழங்க முடியாது.

பிணை மனுக்களை விரைவாக விசாரணை செய்யவும் முடியாது என தெரிவித்தார். அத்துடன், இந்த இரண்டு பிணை மனுக்களுக்கும் எதிராக ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய அரச சட்டத்தரரணி செய்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Posts