Ad Widget

பொலிஸ் மா அதிபரின் வாக்குறுதிக்கு அமைய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் பலியான இளைஞரின் சடலம், கம்பளை உதவி நீதிபதியின் விசாரணைக்கு பின்னர், பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்திய பீடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் நேற்று பகல் 12.00 மணிமுதல் 3.00 மணிவரை சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள் கண்டி – நுவரெலியா பிரதான பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும், நடைபெற்றது தற்கொலை அல்ல கொலை அதற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததால் போராட்டம் நீடித்தது. இதனையடுத்து, அமைச்சர் பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்தனர்.

பின்னர் மக்களின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் கவனத்திற்கு இவர்கள் கொண்டு வந்தனர்.

இதன்படி பொலிஸ்மா அதிபர் வழங்கிய வாக்குறுதி பற்றி பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் ஆகிய இருவரும் மக்களிடம் எடுத்து கூறியதற்கு இணங்க ஆர்பாட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

4 அடி உயரமான கதவில் 06 அடி மனிதன் தூக்கில் தொங்கியதாக கூறப்படும் விடயம் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புஸ்ஸல்லாவ – ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் என்ற 28 வயது இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும் செல்லும் வழியில் அவர் பலியாகியுள்ளதாக தெரியவந்தது.

குறித்தநபர் குற்றச்செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி நேற்று முன்தினம் இரவு 07.30 அளவில் புஸ்ஸல்லாவ – பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை புஸ்ஸல்லாவ பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

இந்தநிலையில், சந்தேகநபர் தனது ரீசேட்டை பயன்படுத்தி தூக்கில் தொங்கியுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும் இடையில் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதே வேளை குறித்த சம்பவத்தை அடுத்து இரு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேகநபரை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியமைக்காகவே, சம்பவம் இடம்பெற்ற போது கடமையில் இருந்த இரு பொலிஸாருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts