Ad Widget

பொருளாதார மத்திய நிலைய இழுபறி தீர்ந்தது: வாக்கெடுப்பில் ஓமந்தை தெரிவு

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 பேரின் ஆதரவுடன் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2,000 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்குமாறு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில் குழப்பங்கள் தோன்றின.

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதற்கான அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கீழ் இருந்தமையால், அவரின் தெரிவாக ஓமந்தை இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமைக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில மாகாண சபை உறுப்பினர்களும் கோரினர்.

இந்நிலையில், இந்த இழுபறியைத் தீர்க்கும் பொருட்டு, முதலமைச்சர் அலுவலகத்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டு அனுப்பப்பட்டது.

வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை (11) முடிவுற்ற நிலையில், பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமையப் பெறுவதற்கு 21 உறுப்பினர்களும், தாண்டிக்குளத்தில் அமையப் பெறுவதற்கு 5 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மேலும் 13 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவில்லை

Related Posts