வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த முடிவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பாதா அல்லது தாண்டிகுளத்தில் அமைப்பதாக என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்மைப்பு மற்றும் வட மாகாணசபை உறுப்பிர்களிடையே எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்மைப்பு மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியூதின் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி ஏகமனதாக எடுக்கும் முடிவினை அரசாங்கம் ஏற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா கூட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறாயினும் பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது குறித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடையே இரண்டு தடவைகள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கருத்து கணிப்புக்களும் பெறப்பட்டன.
இந்த நிலையில், பொருளாதார மத்திய நிலையம் குறித்து வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானிக்கும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.