Ad Widget

பொருத்து வீடுகள் இல்லை! வடக்கில் கல் வீடுகளே அமைக்கப்படும் அமைச்சர் விஜயகலா உறுதி

வடக்கு மாகாணத்துக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படமாட்டாது என்றும், கல் வீடுகளே வழங்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் உறுதியளித்தார்.

இயற்கை அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.,

“போர் மற்றும் இயற்கை அனர்த்தம் ஆகிய இரண்டினாலும் வடக்கு, கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பொருத்து வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. வடக்குக்கு பொருத்து வீடுகள் சாத்தியமில்லை. நிரந்தர கல் வீடுகளே தேவை. இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்புப்பெற கல் வீடுகளே தேவை. வடக்குக்கு கல் வீடுகளே தேவை என்பதற்கு இயற்கையே பாடம் புகட்டியுள்ளது” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,

“எமது அரசு பொருத்து வீட்டுத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது. கல் வீடுகளே கட்டிக் கொடுக்கப்படும்” என்று கூறினார்.

இதையடுத்து விஜயகலாவின் கருத்துக்குப் பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.,

“மீள்குடியேற்ற அமைச்சர் அதே (பொருத்து வீடு) நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். நீங்கள் வேறு நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்” என்று கூற, இராஜாங்க அமைச்சர் இதற்குப் பதிலளித்தபோதும் அவரது ஒலிவாங்கி முடக்கப்பட்டிருந்தது.

Related Posts