Ad Widget

பொன் அணிகள் போர், ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

judgement_court_pinaiபொன் அணிகள் போரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அமலனின் கொலையுடன் தொடர்புபட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கர் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்ற பொன் அணிகள் போரின் போது, பழைய மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான யாழ்ப்பாணம் செட்டியார் தெருவைச் சேர்ந்த ஜெயரட்ணம் தர்ஷன் அமலன் (23) என்ற இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையுடன் தொடர்புபட்ட நால்வர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மறுநாள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கடந்த 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் நால்வர் கைது செய்யப்பட்டு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுடன் இவர்களையும் இணைத்து கடந்த 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அதற்கமைய அவர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட போது, அமலனின் நண்பர்களினால் அமலனைக் கொலை செய்தவர்கள் என ஐவர் அடையாளங் காட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts