Ad Widget

பொன் அணிகளின் போரில் கைகலப்பு ஒருவர் பலி

attack-attackபொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்நெல் மைதானத்தில் நடைபெற்றுகொண்டிருந்த போது ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இரண்டு கல்லூரிகளின் பழைய மாணவர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனையடுத்தே கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான செட்டியார்தெரு யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த ஜெயரட்னம் தர்ஷன் அமல்ராஜ்(வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நடுவர் மீது ரசிகர்கள் தாக்குதல் நடத்தியமையினால் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டம் இடைநிறுத்தப்பட்டு, தொடர்ந்து விளையாடுவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இக்கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வரும் வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், நடுவர் கொடுத்த ஆட்டமிழப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக நடுவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் நடுவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் பி.துவாரகசீலன் முன்னே சென்று துடுப்பெடுத்தாட எத்தணித்த தருணத்தில் அதனை விக்கெட் காப்பாளர் ஸ்டொம் செய்தார். இவ்வேளை விக்கெட்களின் பேல்ஸ் கட்டைகள் இருந்த இடத்தில் அப்படியே நின்றன. இது கிரிக்கெட் நியதிக்கமைய ஆட்டமிழப்பில்லை. இருந்தும் இரண்டாவது நடுவர் ஆட்டமிழப்பினை வழங்க சென்.ஜோன்ஸ் அணித்தலைவர் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இருந்தும், பிரதான நடுவர் (மெயின் அம்பியர்) அதனை ஆட்டமிழப்பு இல்லையென்று துடுப்பாட்ட வீரரை மீண்டும் துடுப்பெடுத்தாட அழைத்தார். இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நடுவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளது.

135 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி ஆட்டம் குழப்படையும் வரையில் 2 இலக்குகள் நஷ்டத்திற்கு 27 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts