Ad Widget

பொன்னாலை கிணற்றுநீர் உவர்நீராக மாறும் அபாயம்

கடற்படையினரால் பொன்னாலைப் பகுதியிலுள்ள கிணறுகளில் இருந்து அளவுக்கதிமாக நன்னீர் எடுக்கப்படுவதால் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் கிணறுகள் உவர்நீராக மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடற்படையினர் 24 மணிநேரமும் பாரிய பவுஸர்களில் நன்னீர் எடுத்துச் செல்வது தொடர்பாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் என்பன அறிந்திருந்தும், இதனை கட்டுப்படுத்துவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

சுழிபுரம் சம்பில்துறை மற்றும் மாதகல் ஆகிய இடங்களில் உள்ள கடற்படை முகாம்களுக்கும் சம்பில்துறையிலுள்ள விகாரை மற்றும் ஹோட்டலுக்குமாக பொன்னாலையிலுள்ள நன்னீர்க் கிணறுகளில் இருந்து தினமும் பாரிய பவுஸர்கள் மூலம் நன்னீர் எடுத்துச்செல்லப்படுகின்றது.

வரண்ட கரையோர கிராமமான பொன்னாலையில் இருந்து படையினர் இவ்வாறு பெருமளவில் நன்னீரை எடுத்துச்சென்றால் மிகவிரைவாக இங்குள்ள நீர், உவர்நீராக மாற்றமடையும் என்று மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

யுத்தத்துக்கு முன்னரும் காரைநகரில் தங்கியிருந்த கடற்படையினர் பொன்னாலைக்கு வந்து நன்னீர் எடுத்துச்சென்றனர். அப்போது, ஒரு நாளில் காலை, மாலை என்று இரு தடவைகள் மட்டுமே நீர் எடுக்கப்பட்டது. தற்போது 24 மணிநேரமும் தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர்.

எனவே, கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதனை மட்டுப்படுத்த வலிகாமம் மேற்கு பிரதேச சபையும் பிரதேச செயலகமும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரனிடம் கேட்டபோது, ‘பொன்னாலைப் பகுதியிலிருந்து முன்னர் கடற்படையினர் பல கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றுச்சென்றிருந்தனர். பிரதேச சபைக்குச் சொந்தமான கிணறுகளை விடுவிக்குமாறு கோரியதையடுத்து அந்தக் கிணறுகளை கடற்படையினர் விடுவித்துள்ளனர்’ என்றார்.

‘தற்போது அவர்கள் நீரைப் பெற்றுக்கொள்ளும் கிணறுகள் கடற்படைக்குச் சொந்தமான காணிகளிலுள்ள கிணறுகளில் இருந்து ஆகும். அந்தக் கிணறுகளில் அளவுக்கு அதிகமாக நீரை எடுத்தால், அருகிலுள்ள கிணறுகள் உவர்நீர்க் கிணறுகளாக மாற்றமடையும் அபாயம் காணப்படுகின்றது. இது தொடர்பில் கடற்படையினருக்கு தெரியப்படுத்தியிருந்ததுடன் அந்தக் கிணறுகளை மக்களிடம் கையளிக்குமாறும் கோரியிருந்தோம்.

எனினும், அதற்கு கடற்படையினர் எழுத்து மூலமான பதில் எதனையும் இதுவரையில் வழங்கவில்லை. இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக’ அவர் மேலும் கூறினார்.

Related Posts