Ad Widget

பொன்சேகாவுக்கு உயரிய விருதினை வழங்கியது இந்தியா

பயங்கரவாதத்தினை ஒழித்தமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Sarath-Fonseka

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத் தளபதிக்கு பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக விருதினை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கி வைத்துள்ளார்.

இந்தியாவினால், வருடாந்தம் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு மாநாட்டில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு சம்பந்தமான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பயங்கரவாதம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடுகளின் அனுபவங்கள் என்பன இந்த மாநாட்டில் பரிமாறிக்கொள்ளப்படும்.

இந்திய உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில், நடத்தப்படும் இந்த மாநாட்டை இந்திய சர்தார் பட்டேல் பொலிஸ் பல்கலைக்கழகம், ஜோதப்பூர் பாதுகாப்பு மற்றும் இந்திய குற்றவியல் கற்கை பிரிவு ஆகியவை ஒழுங்கு செய்துள்ளன.

இந்தியாவில் நடந்த செப்டம்பர் 26 தாக்குதல், நாட்டு எல்லையில் நடக்கும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத ஒழிப்பு தந்திரோபாயம், முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களின் பயங்கரவாத செயல்கள், கடல் வழி பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகிப்பது, போதைப் பொருள் மற்றும் போலி நாணயங்கள் அச்சிடுவது போன்ற பயங்கரவாதிகளின் வருமான வழிகள் மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளின் போன்ற அமைப்புகளை தோற்கடித்து தொடர்பான அனுபவங்கள் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோஹர் பரிகர், இந்திய வெளிவிவகார இணையமைச்சர் வீ.கே. சிங், அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், கிரீஸ், சேர்பியா, இத்தாலி, இஸ்ரேல், நேபாளம், ரஷ்யா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

பயங்கரவாதம் அடக்குவதில் இலங்கை பெற்ற அனுபவம், வெற்றியை பெற்ற விதம் குறித்து சரத் பொன்சேகா மாநாட்டில் விளக்கியுள்ளார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகள், புலிகளை தோற்கடிக்க இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கையாண்ட தந்திரோபாயங்கள், வன்னி இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்தும் சரத் பொன்சேகா தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts