பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள் – தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்!

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள்….

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரண்ட காலநிலை காரணமாக, மக்கள் தங்களுடைய காணிகளை சுத்தப்படுத்துவதற்காக வைக்கும் தீ, கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

எனவே, காணிகளுக்கு தீ வைப்பதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தீ வைப்பவர்களை அடையாளம் கண்டால், அவர்களைப் பாதுகாக்கவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்காமல், அவர்களது அடையாளம் மற்றும் சம்பவம் தொடர்பான தகவல்களை கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

ஒருவர் பொறுப்பற்ற முறையில் வைத்த தீ காரணமாக அருகிலுள்ளவர்களின் காணிகள், வீடுகள் அல்லது சொத்துக்கள் பாதிக்கப்படுமானால், சட்டரீதியாக பொறுப்புக்கூறல் மற்றும் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு கோருதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

அதேபோன்று, தீ பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரதேச சபையின் வாகனங்கள், நீர் மற்றும் ஏனைய வளங்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், அதற்கான பொருத்தமான செலவுகள்/கட்டணங்கள் தொடர்புடையவரிடமிருந்து அறவிடப்படும் நிலை ஏற்படலாம்.

மிகவும் முக்கியமான விடயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியான தீயணைப்பு படைப் பிரிவு இல்லை. தற்போது பிரதேச சபைகள் தங்களிடம் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, தன்னார்வ அடிப்படையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றன.

மேலும், பிரதேச சபை ஊழியர்கள் பொதுவாக பகல் நேரங்களில் மட்டுமே கடமையில் இருப்பதால், இரவு நேரங்களில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு உடனடி உதவி வழங்குவதில் கடுமையான வரம்புகள் காணப்படுகின்றன.

எனவே, “தீ வைத்த பின்னர் அணைத்துவிடலாம்” என்ற எண்ணம் வேண்டாம்.
ஒருவரின் கவனக்குறைவால் ஏற்படும் தீ, பல குடும்பங்களின் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கக்கூடும்.

தீ வைப்பவர்களை அடையாளம் கண்டால், அவர்களின் தகவல்களை கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு வழங்கி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஒத்துழையுங்கள்.
உங்கள் பொறுப்பான செயற்பாடு – உங்கள் குடும்பத்தையும், உங்கள் அயலவர்களையும், உங்கள் சமூகத்தையும் பாதுகாக்கும்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு
பொதுமக்களின் ஒத்துழைப்பை அன்புடன் கேட்டுக்கொள்கிறது

Related Posts