Ad Widget

பொதுச் சுகாதார பரிசோதர்கள் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் முடிவெடுப்பார்

vicky-daklasபொது சுகாதார பரிசோதர்களை பிரதேச சபைகளுக்குள் உள்வாங்குவது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிப்பார் என ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

பிரதேச சபைகளின் கீழ் கடமையாற்றிய சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் பிரதேச சபையின் கீழ் கடமையாற்ற அனுமதிக்கும்படி சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் மார்ச் 17 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் யாழ்.மாவடத்தின் சுகாதார வேலைத்திட்டங்கள் பாதிக்கப்பட்டு பல சுகாதாரச் சீர்கேடான விடயங்கள் இடம்பெறுகின்றமை கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், பிரதேச சபைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமைக்கு அமர்த்துவது தொடர்பில் எந்தவித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என பிரதேச சபை தலைவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனடிப்படையில், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து, பிரதேச சபைகளின் கீழ் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை உள்வாங்குவது மற்றும் பிரதேச சபைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் ஆளணியினை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களை வடமாகாண முதலமைச்சர் தீர்மானம் எடுத்து அறிவித்தல் வழங்குவார் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் நல்லூர், உடுவில், தெல்லிப்பளை, சங்கானை ஆகிய பிரதேச சபைகளின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் இடமாற்றியமை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்தே சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வடமாகாணத்திலுள்ள பிரதேச சபைகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்களிற்கான ஆளணி வடமாகாண சபையினால் 6 மாத காலத்திற்குள் ஏற்படுத்தித் தரப்படுமென வடமாகாண முதலமைச்சர் கடந்த 2 ஆம் திகதி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Posts