Ad Widget

பேச்சுக்கு நாம் தயார், தீர்வுத் திட்டத்தை உருவாக்க அரசு தயாரா – கூட்டமைப்பு

‘தேசிய பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாம் தயார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி தீர்வுத் திட்டத்தை உருவாக்க புதிய அரசு தயாராக உள்ளதா?’ என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கேள்வி எழுப்பினார்.

suresh

வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் ‘ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சுரேஸ் எம்.பி, ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகப் பெரிய மோசடிகளைச் செய்திருக்கின்றார். ஆகவே, நாம் மைத்திரிபால சிறிசேனவை குற்றங்கான வேண்டிய தேவை இல்லை. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தின் போது உரையாற்றிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தனது தம்பி மஹிந்தவை தட்டிக்கேட்கும் அளவுக்கு எந்தவோர் அமைச்சருக்கும் முதுகெலும்பு இருக்கவில்லை என கூறியிருக்கின்றார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவ்வாறு முதுகெலும்பு இருந்ததை தான் பார்த்திருக்கவில்லை. ஆனால், முதுகெலும்பு இருந்திருக்கின்றது. அதனால்தான் மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றம் வந்திருக்காவிட்டால் இந்த நாட்டுக்கு என்ன நடந்திருக்குமோ தெரிந்திருக்காது என்று தம்பியைப் பற்றி அண்ணனொருவர் சொல்லக்கூடிய அளவுக்கு இந்த நாட்டில் 10 வருட ஆட்சி இருந்திருக்கின்றது’ என கூறினார்.

‘ஒட்டுமொத்தமாக நாட்டில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. அலரி மாளிகைக்கு சென்று வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி, அலரி மாளிகை சமையல் அறையில் 47 கடற்படை வீரர்கள் பணியாற்றுவதாக கூறியிருந்தார். ஒருநாள் சாப்பாட்டுக்காக அலரி மாளிகையில் எத்தனை மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அவரின் இரண்டாவது மகனின் செருப்பின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாய். அந்த அளவுக்கு இந்த நாட்டில் ஊழல் இடம்பெற்றிருக்கின்றது. எனவே, ஆட்சி மாற்றம் என்பது சிங்கள மக்களுக்கும் தேவையானதாக இருந்தது என்பதனையும் நாம் பார்க்கவேண்டும்’ என சுட்டிக்காட்டினார்.

‘வெறுமனே சிங்கள மக்கள் மாத்திரம் இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவில்லை. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் மற்றும் மலையக தமிழர்களும் இணைந்தே இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர். எனவே, சிங்கள மக்களுக்கு ஆட்சி மாற்றம் தேவையாக இருந்தாலும் சிறுபான்மையினருக்கு அதைவிட பல மடங்கு அதிகமாக ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது.

வந்துள்ளவர்கள் எவ்வாறு ஆட்சியை கொண்டுபோகப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த மாற்றம் இங்கு வாழும் மக்களுக்கு அப்பால் சர்வதேச ரீதியிலும் மாற்றம் தேவைப்பட்டது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா ஓர் ஆதிக்கத்தை உருவாக்க விரும்பியது. அதற்கு இலங்கை துறைமுகம் மிக முக்கியமானதாக அமைந்தது. அதனை தனக்கு சாதமாக கொண்டுவருவதற்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்தார்கள்.

இலங்கை கேட்கும் அத்தனை திட்டங்களையும் செய்து கொடுத்தார்கள். அதில் பல கோடிகள் அப்போது இருந்தவர்களின் சட்டைப்பைகளுக்குள் போயிருந்தன. ஆனால், இந்த ஆட்சி மாற்றத்தின் பலனாக அதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது சீனாவின் விடயங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது தற்போதைய அரசு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் ஒரு வருட காலத்தில் 18 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்கவில்லை. நாம் தீர்வு திட்டத்தை கொடுத்த போது அரசு அதற்கு கருத்தை சொல்லாதிருந்து, தெரிவுக்குழுவுக்கு வருமாறே அழைத்தனர்.
தற்போதைய அரசிலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்வுக்கான எந்த சொற்றொடரும் கிடையாது. குறைந்தது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கும் வேலைத்திட்டம் கூட அதில் கிடையாது. ஆனால், தேர்தலுக்கு பிற்பாடு சம்பந்தன், சுமந்திரன் மற்றும் நான் உட்பட ஜனாதிபதியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திரிக்காவையும் சந்தித்தோம். அதன்போது எமது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி சொல்லியிருக்கின்றோம்.

எனினும், இவை எல்லாம் நிறைவேற்றப்படுமா என்பதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஏனெனில் இவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அடுத்த தேர்தலுக்கு போகப்போகின்றார்கள். ஆகவே, அந்த தேர்தலுக்கு போவதற்கு முன்பாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்துவிட்டால் எதிர்தரப்பு நிச்சயமாக தனக்கு சாதகமாக பயன்படுத்தும் என்ற நிலை இன்னும் இருக்கின்றது என அவர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறான நிலையில் எமது கோரிக்கைகளுக்கு பதில் இல்லாமலேயேதான் இருக்கப்போகின்றது. ஆகவே, புதிய நாடாளுமன்றம் உருவாகி அதன்போது ஆட்சி அமைக்கும் அரசின் நிலைப்பாடு தமிழ் மக்கள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றார்கள் என்பதனை வைத்துதான் நாம் எதனையும் சொல்லமுடியும்’ என சுரேஸ் பிரேமசந்திரன் கூறினார்.

‘பல இழப்புகளை சந்தித்த தமிழ் மக்ககள், எமக்கு இந்த ஆட்சியின் ஊடாக ஏதாவது தீர்வு கிட்டுமா என்பதை பார்க்கவேண்டியதே தற்போதைய பிரச்சினை. அது பெரிய கேள்வி அடையாளமாகவே இருக்கின்றது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கின்றோம். நாம் ஏற்கெனவே தீர்வுத்திட்டத்தை கொடுத்திருக்கின்றோம். ஆனால், புதிய அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசி ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க தயாராக இருக்கின்றதா?.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு அதிகப்படியான அதிகாரங்களுடன் சுயாட்சி கொடுப்பதாக கூறுகின்றார். ஆனால், அவர்கள் கூறுவது நடைமுறைக்கு வரவேண்டும். பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் நடைபெற வேண்டும். அதில் சரியான முடிவுகள் எட்டப்பட வேண்டும். அவை இல்லாத பட்சத்தில் அது வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்’ என சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

Related Posts