Ad Widget

புலிகளின் வைப்பக நகைகளை மனைவிக்கு அணியக் கொடுத்தாரா ஜனாதிபதி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகங்களில் இருந்து மீட்கப்பட்ட மக்களின் நகைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 5 வருடங்களாக அடவு வைத்திருந்தாரா? அல்லது தனது மனைவிக்கு அணிய கொடுத்திருந்தாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

Sumanthiran MP

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எடுத்த ஏனைய நகைகள் எங்கே? ஐந்து வருடங்களாக இந்த நகைகளை வைத்திருந்து என்ன செய்தார்கள்?’ என்றும் கேட்டார்.

‘வடக்கிலுள்ள மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கியிருந்தார். அந்த காணி உறுதிகளை, மாகாண சபையின் அனுமதி பெற்றே அவர் வழங்கியிருக்க வேண்டும். இருந்தும் அவர் அவ்வாறு வழங்கவில்லை.

தேசிய ஆணை காணிக்குழுவினூடாகவே காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது அரச சட்டம். இருந்தும் அந்த குழு தற்போது இயங்காமையால் ஜனாதிபதி நேரடியாக காணிகளை வழங்கியுள்ளார்.

வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு காணிகள் வழங்கப்படவேண்டும். தவறான முறையை பின்பற்றி காணி அனுமதிப்பத்திரம் கொடுத்தமை தவறானது. காணியை கையளித்து நாடகம் ஆடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ எனவும் அவர் கூறினார்.

‘இனப்படுகொலை என்ற விடயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்று இல்லை. சர்வதேச குற்றங்களுக்குள் இனப்படுகொலையும் அடங்கும். இலங்கையில் சர்வதேச குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலேயே ஐ.நா.வின் விசாரணை நடைபெற்றது. அற்குள் இனப்படுகொலை என்ற விடயத்தை உள்ளடக்கி அதை மட்டுப்படுத்த வேண்டாம்.

உண்மையை கண்டறிவதற்காக பக்கச்சார்பின் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு தடையாக இனப்படுகொலை என்ற தீர்மானங்களை திரும்பத் திரும்ப கொண்டுவர வேண்டாம்’ என்று சுமந்திரன் எம்.பி கோரினார்.

‘தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதனால் எங்களுக்கு நன்மையும் இல்லை தீமையும் இல்லை.

சிங்கள மக்கள் இதுவரை காலமும் ஜனாதிபதியை நம்பி ஏமாந்தது போல இனியும் ஏமாற வேண்டாம். இன முரண்பாட்டை தூண்டுகின்ற பொறுப்பற்ற செயலை ஜனாதிபதி செய்கிறார் என்பதை வெளிப்படையாக கூறுகின்றேன். அத்துடன், தமிழ் மக்களும் நிதானத்தை கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts