Ad Widget

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர்! : பாதுகாப்புப் படைகளின் பிரதானி

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும். இன்று நாம் வாழ்வதற்கு அவர்களின் அர்ப்பணிப்பே காரணம். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

யுத்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட எமது புலனாய்வு நடவடிக்கைகளின் பின்னணியில் முஸ்லிம் சமூகமே முற்றுமுழுதாக செயற்பட்டது. எம்முடன் இணைந்து அவர்கள் பயணித்தனர். புலிகளின் பிரதேசங்களுக்குச் சென்று, மொழிப்புலமை பெற்று, அவர்களது உயிர்களை தியாகம் செய்து எமக்கு தேவையான தகவல்களை வழங்கி, எம்மைக் காத்தார்கள்.

இவ்வாறான பின்னணியைக் கொண்டவர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தும் சிங்களவர்கள் உள்ளிட்ட அனைவரும் துரோகிகள். இன்று கண்டியில் குண்டுப் பயம் இன்றி அனைவரும் பயணிக்க முஸ்லிம் சமூகமே காரணம்.

புலனாய்வுப் பணியில் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு அபாரமானது. அவர்களது பெயரை நான் குறிப்பிடத் தேவையில்லை. யுத்த காலத்தில் புலிகளால் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டமைக்கும் இதுவே காரணம்.

பாதுகாப்புப் படையின் அதிகாரி என்ற ரீதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் குறித்து நான் கவலையடைகிறேன். தற்போது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் தரப்பினர், யுத்த காலத்தில் எந்த பங்களிப்பையும் வழங்கவில்லை.

இந்நிலையில், பாதுகாப்புப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு மக்களின் உயிரைக் காக்க போதுமான பாதுகாப்பை வழங்கிவருகின்றனர். அத்தோடு, சொத்துக்களை சேதப்படுத்துவதை தடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Related Posts