Ad Widget

புலனாய்வாளர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் – அனந்தி

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

Ananthy

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-

காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல்போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம்.

அன்றைய தினம் தட்சனாமருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் போனோரின் உறவினர்களின் குழுவுடன் இணைந்து பாப்பரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன்.

எனினும் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் எனது வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் இது யாருடைய வாகனம் என எனது சாரதியிடம் கேட்டுள்ளனர்.

அவரும் எனது வாகனம் என சுட்டிக்காட்டியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நான் அச்சுறுத்தல் காரணமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் தங்காமல் வேறு இடத்திற்குச் சென்று மரத்தின் கீழ் இரவு முழுவதும் தங்கியிருந்து மறுநாள் எமது குழுவுடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

புதிய ஆட்சி என சொல்லிக் கொள்பவர்கள் தொடரும் அச்சுறுத்தல்களுக்கும், தீவிர தமிழ் தேசியப் பற்றுள்ளவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் – எனத் தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பாக இலங்கையின் புதிய மற்றும் பழைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்குமாறு அனந்தி சசிதரனால் பாப்பரசரிடம் நேற்றையதினம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts