Ad Widget

புதிய வருட வேலைத்திட்டத்தில் வீடமைப்பு முன்னுரிமை பெறும்: யாழ்.அரச அதிபர்

2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகருக்கிடையிலான பாலம் அமைப்பு என்பன முக்கியமானதாகுமென யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள், புதுவருடத்தில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி பங்களிப்பு என்பன குறித்து விளக்கமளிக்கும் வகையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”2016ம் ஆண்டில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக மொத்தமாக 5300 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றது. அதில் குறிப்பாக 4000 மில்லியன் ரூபா நிதியானது மீள்குடியேற்ற அமைச்சினால் எமக்கு கிடைக்கபெற்றது. யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி யாவும் முழுமையாக செலவழிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வீட்டுத்திட்டம், வீடு புனரமைப்பு, கிணறு, மலசலகூடம் அமைத்தல், தீவக பகுதிகளின் இறங்குதுறைகள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக இந்த நிதி முழுமையாக செலவிடப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டத்திற்கென எமக்கு 31000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் 14000 குடும்பங்கள் சொந்த காணிகள் இல்லை என எமக்கு விண்ணப்பித்துள்ளன. இவர்களுக்கான உதவிகளை விரைந்து மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்றார்.

Related Posts