புதிய ஆளுநரின் செயற்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் – சிவஞானம்

வடக்கு மாகாணத்திற்கு இராணுவ பின்புலம் இல்லாத சிவிலியன் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரின் எதிர்காலச் செயற்பாடுகள் மாகாணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

CVK-Sivaganam

இதனூடாக மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி மாகாண சபையையும் சிறந்த முறையில் இயங்குகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக இருந்த இராணுவ தளபதியான மேஐர் ஜெனரல் ஜீ..ஏ.சந்திரசிறியை மாற்றி அவருக்கு பதிலாக எச்.எம்.ஐ.எஸ்.பளிக்ஹக்கார என்ற சிவில் அதிகாரியொருவர் மாகாண ஆளுநராக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் மாற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த சீ.வீ.கே.சிவஞானம் தொடர்ந்து கூறும்போது,

யுத்தம் முடிவடைந்து அவசர அவசரமாக இராணுவ தளபதியொருவரை கடந்த அரசாங்கம் ஆளுநராக நியமித்திருந்தது. அந்த ஆளுநரின் கீழேயே மாகாண நிர்வாகமும் நடைபெற்று வந்தது. இதனால் மாகாணத்தில் இராணுவ ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.

இந்நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது. இதன் போது வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு இரானுவ அதிகாரியான அளுநரை மாற்றி சிவிலியன் ஒருவரை நியமிக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தோம்.

இவ்வாறு மாகாண சபையிலும் பிரேரணை முன்வைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆயினும் கடந்த அரசாங்கம் இதற்கு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அத்தோடு மாகாண சபையின் எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றாது தொடர்ந்தும் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு பல்வேறு இடையூறுகளை விளைவித்து முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் ஊடாக புதிய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிவிலியன் ஒருவர் மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் இராணுவமல்லாத சிவிலியன் என்ற ரீதியில் நாம் வரவேற்கின்றோம் என்றார்.

Related Posts