மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கான வரவேற்பும் ,அவருடைய பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை திகதி இடம் பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பாக மன்னார் மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிய ஆயரின் வரவேற்பு மற்றும் பணிப்பொறுப்பு ஏற்கும் நிகழ்வுகளை சிறப்பாக மேற்கொள்ள மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை மற்றும் மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் குருக்களை கொண்ட பல உபகுழுக்கள் ஏற்படுத்தப்பட்டு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய ஆயரை வரவேற்பதற்கு எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் தள்ளாடிச் சந்தியில் இருந்து மோட்டார் வாகனப் பவனி ஆரம்பமாகி மன்னார் பிரதான பாலத்தை வந்தடையும்.
மன்னார் பெரிய பாலத்தடியில் புதிய ஆயர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்படுவார். பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்த வாகனத்தில் நாதஸ்வரம், பாண்ட் மற்றும் இன்னிசை வாத்தியம் முழங்க புதிய ஆயர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குப் பவனியாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது