Ad Widget

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு: நான்காவது நாள் சாட்சியப்பதிவின்போது

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான்.

வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இன்றைய நான்காவது நாள் சாட்சியப்பதிவின்போது மன்றில் முன்னிலையாகியிருந்த மணிவண்ணன் தனுராம் என்ற சிறுவன், சம்பவ தினத்தன்று தானும் தனது நண்பனும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நண்பனின் பாதணி கழன்று விழுந்துவிட்டதாகவும், அதனை எடுப்பதற்காக பின் நோக்கி ஓடியபோது முனகல் சத்தம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், பாழடைந்த அந்த இடத்தில் அவ்வாறு சத்தம் கேட்டதால், பேய் என நினைத்து பயந்து ஓடியதாகவும் ஓடும்போது வித்தியா கொலை வழக்கின் 2ஆம் எதிரி வீதியில் நின்றுகொண்டிருந்ததை தான் கண்டதாகவும் சாட்சியமளித்துள்ளான்.

அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவனோடு அன்றைய தினம் பயணித்த தனுஜன் என்ற சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அன்றைய தினம் தனது காலணி கழன்று விழுந்ததை உறுதிப்படுத்திய குறித்த சிறுவன், தனது நண்பனே அதனை எடுக்க பின்னால் ஒடிச்சென்றதாக குறிப்பிட்டுள்ளான்.

இன்றைய சாட்சியப் பதிவில் மூன்றாவதாக சாட்சியமளித்த பாலசங்கரன் பாலசிங்கம் என்பவர், வழக்கின் 2ஆம் எதிரி தனது தங்கையின் கணவன் என மன்றில் தெரிவித்தார். அத்தோடு, சம்பவ தினத்தன்று தான் கடைக்குச் சென்றபோது, 2ஆம் எதிரியான தனது தங்கையின் கணவனும், 3ஆம் எதிரியும் கடைக்கு அருகே நின்றுகொண்டிருந்ததை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சாட்சியப்பதிவின்போது மன்றில் ஆஜரான இலங்கேஸ்வரன் என்ற சாட்சியாளர், சம்பவ தினத்திற்கு முதல்நாள் தான் கடைக்குச் சென்றபோது, எதிரிகளான சுவிஸ்குமார், சசிகுமார், சந்திரஹாசன் மற்றும் கண்ணனோடு மேலும் இருவர் அவ்விடத்தில் டொல்பின் ரக வான் ஒன்றில் காத்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது பாடசாலை முடிந்து பேரூந்திலிருந்து இறங்கிய வித்தியா, கடைக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது துவிச்சக்கர வண்டியில் ஏறிச் சென்றதாகவும், அதனை வானில் இருந்தவாறு சுவிஸ்குமார் உள்ளிட்டோர் அவதானித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த சம்பவத்திற்கு பின்னரே தமக்கு உண்மை தெரியவந்ததென அவர் மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சதானந்த ரூபினி என்ற சாட்சியாளர், சம்பவ தினத்தன்று தான் பிரதேச செயலகத்திற்கு சென்றபோது, வழக்கின் சந்தேகநபரான தில்லைநாதன் சந்திரஹாசன் ஒற்றையடி பாதை ஊடாக சரத்தை மடித்து கட்டிக்கொண்டு வேகமாக சென்றதாகவும், அந்த பாதை வழியே சென்றால் சம்பவ இடத்திற்கு செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் சந்தேகநபர் எங்கு சென்றார் என்பது தனக்கு தெரியாதென குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பகிர்வு பத்திரத்தில் திருத்தம் செய்வதற்கு வழக்கை நெறிப்படுத்தும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்ததையடுத்து, இன்றைய தினம் மேலதிகமாக இரண்டு சாட்சியாளர்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 51 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டனர். அத்தோடு, மேலதிகமாக இரண்டு சான்றுப் பொருட்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

Related Posts