Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம்! அரசியலாக்கி, கேவலப்படுத்தாதீர்! பாரபட்சமற்ற விசாரணைக்கு தயவு செய்து ஒத்துழையுங்கள்! – டக்ளஸ்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலைச் சம்பவத்தை அரசியலாக்கி, அதில் இலாபம் தேடிக் கொள்வதற்கு சில சுயநல அரசியல் சக்திகள் முயற்சிக்கின்றன. இதன்மூலம் அம் மாணவியின் நற்பெயரை கேவலப்படுத்தும் செயற்பாடுகள் தொடரப்படுகின்றன. இது அம் மாணவியின் குடும்பத்தாரின் மன வேதனையை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, இவ்வாறான கேவலமான செயற்பாடுகளில் இறங்குவதை இச்சக்திகள் தவிர்த்துக்கொள்வதுடன், நியாயமான செயற்பாடுகளுக்கு வழிவிட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

dak-poongudu

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இம் மாணவியின் படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும், அதே நேரம் இவ்வாறான படு மோசமான சம்பவங்கள் எங்கும் தொடராதிருக்க உரிய சட்ட நடவடிக்கைகள் அவசியம் ஏன்பதையும் நாம் ஜனாதிபதி அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன்.

அதே நேரம் நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம், குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களுக்குப் பொருத்தமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமெனவும், வழங்கப்படும் தண்டனைகள் ஏனையவர்களுக்கு படிப்பினையாக அமைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டேன்.

இந்நிலையில், சில சுயநல அரசியல்வாதிகள் இச் சம்பவத்தை முன்வைத்து, குறுகிய அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றனர். இதனால் பாரபட்சமற்ற விசாரணைக்கான செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்ற நிலைமைகள் தோன்றுகின்றன. எனவே, இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்பட்டு, பாரபட்சமற்ற விசாரணைக்கு தயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Posts