Ad Widget

பிரதமரை சந்திக்க அவசியம் இல்லை ; ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம் – சுமந்திரன்

அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட பிரதமர் இணக்கம் தெரிவித்து காலம் ஒதுக்கிய போதும் அதனை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், பிரதமரை தாம் ஆர்ப்பாட்டம் செய்யும் வீதிக்கு வந்து கதைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பினர் நியாயமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள். என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சபையில் தெரிவித்தார். பிரதமரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவோ நாம் முயற்சிக்கவில்லை. ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம் என சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று (நேற்று) பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அதேபோல் காலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற வேளையில் குறைந்தபட்சம் அதிகாரி ஒருவர் கூட வரவில்லை எனவும் கூறினர். இது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் விசாரித்தேன். செயலகத்தின் சிரேஷ்ட பிரத்தியேக செயலாளர் மற்றும் செயலக அதிகாரிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது கூட்டமைப்பினரும் ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் ஜனாதிபதி இல்லாத காரணத்தினால் பிரதமரை தொடர்புபடுத்தி தருகின்றோம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் பிரதமருடன் உரையாடி சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். அலரிமாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை நிராகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், பிரதமரை தாம் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு அதாவது வீதிக்கு வந்து கதைக்குமாறு தெரிவித்துள்ளனர். முதலில் நீங்கள் நியாயமாக நடந்துகொள்ள முயற்சியுங்கள். நாட்டின் பிரதமர் வீதிக்கு வந்து கலந்துரையாட மாட்டார். அவர் அழைப்பு விடுத்தால் அதற்கு செவி மடுத்து நீங்கள் சென்று கலந்துரையாட வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தும் அதனை நீங்கள் பயன்படுத்தவில்லை. ஆகவே சர்வதேசத்தை ஈர்க்கவும் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தவும் கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர் என்றார்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் கேசரிக்கு தெரிவிக்கையில்,

பிரதமரை சந்திக்கவோ அல்லது அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவோ நேற்று நாம் முயற்சிக்கவில்லை. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம். அப்போது செயலகத்தில் இருந்து வெளியில் வந்த ஒருவர் தன்னை செயலாளர் என அறிமுகப்படுத்தியதுடன், ஜனாதிபதியை சந்திக்க முடியாது வேண்டுமானால் அலரிமாளிகைக்கு சென்று பிரதமரை சந்திக்க முடியும் என்றார். பிரதமரை சந்திக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் சந்தித்திருப்போம், எமக்கு அவரை சந்திக்க வேண்டிய தேவை இல்லை. ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்பதை நாம் தெரிவித்தோம் என்றார்.

Related Posts