Ad Widget

‘பிரசவத்துக்கு பின்னர் இரவு கடமை இல்லை’ : ராஜித சேனாரத்ன

பிரசவத்துக்குப் பின்னர், ஒருவருட காலத்துக்கு, தாதியர்களுக்கு இரவு கடமையை இல்லாமல் செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும், தாதியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறை, புதிய தாதியர் வித்தியாலயத்துக்கான எட்டுமாடிக் கட்டடத்துக்கான அடிக்கல்லை, நேற்று (05) நாட்டி வைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘தாதியர்களுக்கு நான், இன்னுமின்னும் நிவாரணங்களை வழங்குவேன். தாதியர்கள், தங்களுடைய குழந்தையை பெற்றெடுத்து ஒருவருடம் நிறைவடையும் வரையிலும் இரவு நேர கடமைக்கு சமூகமளிக்க தேவையில்லை. அதுவும் ஒரு நிவாரணமாகும். எனினும், பகலில் வேலைசெய்யவேண்டும். அதனூடாக பிள்ளைக்குக் கிடைக்கவேண்டிய பாதுகாப்பு கிடைக்கிறது’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

‘தாதியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். தற்போதைய அரசாங்கம், அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்தது.

அதனுடனேயே, மேலதிக நேர கொடுப்பனவும் அதிகரிக்கப்படவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதனடிப்படையில், என்னுடைய தலையீட்டுடன், நிதியமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம், 2016 ஜனவர் 1ஆம் திகதி முதல், மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. அதற்கான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Related Posts