Ad Widget

பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு: முறையிட்டால் நடவடிக்கை

“இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார்.

சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்று, சமூகவலைத் தளங்களிலும் இணையத் தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது.

இவை தொடர்பில் சிறிதரன் எம்.பியிடம், நேற்று (11) வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அவர் என்னுடைய செயலாளர் அல்ல. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர். வெளியான செய்தி தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை” என்றார்.

பேஸ்புக்கில் அவர் தகவல் பரிமாறியமைக்கான ஆதாரங்களும் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டிருந்தனவே என்று வினவியபோது, “அந்த ஆதாரம் தயாரிக்கப்பட்டும் இருக்கலாம். பேஸ்புக்கில் வெளியான தொடர்பில் கேட்கும் போது, பதில் சொல்ல முடியாது” எனக் குறிப்பிட்டார்.

“குறித்த பெண் பாதிக்கப்பட்டிருந்தால், என்னிடமோ அல்லது கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ முறையிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். அவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது” என்றார்.

“அதுமட்டுமின்றி, சிறைச்சாலையிலுள்ள தனது கணவருக்காக கடிதம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. நாங்கள் இதுவரை யாருக்குமே கடிதம் கொடுத்ததில்லை” என மேலும் குறிப்பிட்டார்.

Related Posts