Ad Widget

‘பாப்பரசராக முயற்சிக்கிறார் தவராசா!’ : வடக்கு முதல்வர் சி.வி. குற்றச்சாட்டு

பாப்பரசரை போல பிரபல்யம் அடையவேண்டும் என்பதற்காகவே வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தன்னைப் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி வருகிறார் என, வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 102ஆவது அமர்வு, அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அமர்வின் ஆரம்பத்திலேயே முதலமைச்சருக்கும் மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போதே முதலமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் தேர்தலில் தோற்றுவிடுவோம், அதன் பின்னர் கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்ற பயத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் காரசாரமான கருத்து மோதல் இடம்பெற்ற நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கருத்துக்களை தெரிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அவைத்தலைவர் பணித்துள்ளார்.

அதன் பின்னர், முதலமைச்சர் தனது உரையை தொடர்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts