Ad Widget

பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு படையினர்களின் உதவிக்கரம்!

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வன்னி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் 700 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

army-help

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட பள்ளியாறு, வண்ணிக்குளம், மண்டகலாறு, பண்ணங்கண்டி,நெடகலியாறு பகுதிகளிலும், முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்துக்குட்பட்ட முதியகட்டு பகுதியிலும், வன்னி பாதுகாப்பு தலைமையகத்துக்குற்பட்ட கொக்கிலாய், ஜானக புர, வெலி ஓய, புல்மோட்டை பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 5000 மக்களுக்கு படையினர், சமைத்த உணவு, மருத்துவ உதவி, சுகாதார மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் தொடர்பான விடயங்களிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளரின் ஆலோசனையின் பேரில் உமயகபரம் வித்தியாலயம், குமரன்புரம் வித்தியாலயம், பொட்டுவாடு வித்தியாலயம், ஆனந்த குளம் வித்தியாலயம் மற்றும் ஶ்ரீ முருகண்டி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4200 பேருக்கான குடிநீர், சவர்காரம், பாய்கள், தலையணைகள் போன்ற பொருட்களுடன் கூடிய அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்டோரின் அநேகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மாவட்டச் செயலக செயலாளிரின் வேண்டுகோளுக்கிணங்க, இடம்பெயர்ந்த அந்தந்தப் பிரதேசங்களில் கூடுதல் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதுன் வீடுகளில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுவதற்கும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கான மருத்துவ உதவிகள் இராணுவ வைத்திய அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைத்து வழங்கப்படுகின்றன. இதேவேளை, கடந்த 48 மணித்தியாலங்களில் வெள்ள அச்சுறுத்தல்களுக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட சிலர் கல்லப்பாடு கணிஷ்ட வித்தியாலயம், பண்டாரவண்ணி தேவாலயம் மற்றும் முதியன்கட்டு வித்தியாலயம் ஆகிய இடங்களில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பி.யூ.எஸ். விதானகேவின் பணிப்புரையின் கீழ் 300 இற்கு மேற்பட்ட படையினர் தற்போது மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் அனைத்து தாழ் நில பகுதிகள் மற்றும் வடிகால்கள் நீரினால் மூழ்கியுள்ள நிலையில் ஆறு மற்றும் முக்கிய குளங்களின் நீர் மட்டங்கள் வேகமாக உயர்ந்து வருவதாகவும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அறிக்கைகளின் மூலம் அறியக்கிடைக்கின்றது.

இதுவரை 208 இடம்பெயர்ந்த மக்கள் மேலே குறிப்பிடப்பட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் படையினர் மேலதிக உதவி நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் தொடர்பில் உள்ளனர். மேலும் கடுமையான மழை காரணமாக ஏற்படும் அசாதரண சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் கடற்படையினர் அவர்களது படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இதேவேளை, கொக்கிலாய், ஜானக புர, வெலி ஓய, புல்மோட்டை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலையிலும் தேவாலயங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 100 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகம் உதவியளித்து வருகின்றது.

அத்துடன் வவுனியா மாவட்ட செயலாளர், ஞாயிறு தொடக்கம் தங்குமிடத்தை விட்டு வெளியேறும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

ஞாயிறு காலை, இராணுவத் தளபதி தனிப்பட்ட முறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தளபதிகளைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் நிலமைகளைக் கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளை செவ்வனே நிறைவேற்றுவதுடன் அது தொடர்பான தகவல்களை தனக்கு உடனுக்குடன் தெரியப் படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts