Ad Widget

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான புதிய தகவல் வெளியானது!

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் அதிகாரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பாடசாலைகளை திறப்பது குறித்த கொள்கை ரீதியான முடிவை எடுப்பது கல்வி அமைச்சுக்கு உரித்தான விடயமாகும். அதற்கான சுகாதார வழிகாட்டல்களை பெற்றுக்கொடுப்பது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.

200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5000 பாடசாலைகள் உள்ளன. விரைவில் இதுபோன்ற பாடசாலைகளை தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, தரம் 6 வரை முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை தொடங்குவதில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சு முடிவு செய்யும். அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஆழமாக ஆராயப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி வழங்கப்படாத போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் விரைவில் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.

Related Posts