Ad Widget

பாகிஸ்தான் அணியின் இந்திய வருகை நிறுத்தி வைப்பு!

இந்தியாவில் நடக்க இருக்கும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி, இந்தியா செல்வதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

போட்டி நடக்கும் இடத்தில் முழு பாதுகாப்பை உறுதி செய்வதாக இந்திய அரசு உத்திரவாதம் அளித்தால் மட்டுமே பாக். வீரர்களை இந்தியா அனுப்ப முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் மார்ச் 19ம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லையில் அவ்வப்போது ஊடுருவியும், இந்திய இராணுவ முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியும் இந்திய இராணுவ வீரர்களை கொன்று குவித்து வரும் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்மசாலாவில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு இமாச்சல முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், கிரிக்கெட் நடக்கும் இடத்தை தர்மசாலாவில் இருந்து கோல்கட்டாவுக்கு மாற்ற வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தர்மசாலாவில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், திடீரென போட்டி நடக்கும் இடத்தை மாற்றுவது குறித்து குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஐசிசி மற்றும் பிசிசிஐ இன்று கூடி ஆலோசிக்க உள்ளன.

இந்நிலையில், இன்று இந்தியா வருவதாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயணத்தை அந்நாடு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், பாதுகாப்பு விஷயத்தில் இந்திய அரசு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி இந்தியா செல்லும். இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாதது ஆகிய காரணங்களை கருத்தில் கொண்டே பாகிஸ்தான் அணியின் இந்திய பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts