Ad Widget

பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால் கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது

பழையமாணவர் சங்கத்தலைவர் யார் என்ற சர்ச்சையால்  கொக்குவில் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் பிற்போடப்படவுள்ளது இது பற்றி தெரியவருவதாவது. பழைய மாணவர் சங்கங்களுக்கு தலைவராக அதிபர் தான் இருக்கவேண்டும் என்ற வகையிலான சுற்றறிக்கை ஒன்று வடமாகாணசபை கல்வியமைச்சினால் அனுப்பட்டிருப்பதாகவும் அதனை காரணம் கூறி பாடசாலையில் சங்க பொதுக்கூட்டத்தினை நடாத்துவதாயின் அதிபரை தலைவராக்க வேண்டும் என்ன வற்புறுத்தியதால் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவுள்ளதாக சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சுற்றறிக்கை பற்றி அக்கறை கொள்ள தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கூறியுள்ளார். மத்திய அரசினால் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள சுற்றறி்க்கை சர்சைக்குள்ளாக்கப்பட்டு அது கிடப்பில் போடபட்டுள்ள நிலையில் இப்புதிய சுற்றறிக்கை வடமாகாணசபையினால் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேசியப்பாடசாலைகளாக இருந்தால் என்ன மாகாணப்பாடசாலைகளாக இருந்தால் என்ன இது ஏற்கனவே உள்ள பழைய மாணவர்சங்கங்களை எந்தவகையிலும் பாதிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். உண்மையில் பழையமாணவர் சங்கம் ஒன்றிற்கான நிர்வாக சபை தெரிவு செய்தல் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள யாப்பின் அடிப்படையிலேயே மேற்கொள்ள முடியும் எனவே சுற்றறிக்கைகள் பற்றி அச்சம் கொள்ளதேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்

இதேவேளை பாடசாலைகளில் வளர்ச்சியில் பழையமாணவர்சங்கங்கள் நிறைய பங்களிப்பினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் சங்கங்களை முடக்கும் செயற்பாடாக இருக்கும் என்றும் அதற்காக அனைத்து பழையமாணவர் சங்கங்களும் ஒன்றுபட்டு எதிர்ப்பினை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இது தொடர்பில் முன்னணி பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள் தொடர்பாடல்களில் ஈடுபட்டு்ள்ளனர்.

பழையமாணவர்சங்கங்களில் பழையமாணவர்கள் முற்றாக நிர்வாக பொறுப்பில் உள்ள வேளையிலேயே பல அதிபர்களால் நன்கொடைகள் துஸ்பிரயோகம் செய்யப்படும் நிலையில் அதிபர்களின் கையில் பழையமாணவர்கங்கள் கைமாற்றப்படும்வேளை இது மேலும் அவர்களுக்கு சாதகமாக்கவே வழிசமைக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளை பொறுத்தவரை அபிவிருத்தி சங்கம் அபிவிருத்திக்குழு ஆகியன ஏற்கனவே பாடசாலை அதிபர்களின் தலைமையில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சுயாதீனமான பழையமாணவர்சங்கங்களில் பாடசாலை அதிபர்களின் தலையீடு அவசியமற்றது என்றும் பழையமாணவர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.பாடசாலை அதிபர்கள் பழையமாணவர்சங்கங்கள் இயங்க தடுக்கும் சந்தர்ப்பத்தில் வெளியில் சுயாதீனமாக சங்கங்களை இயக்கமுடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Posts