Ad Widget

பழியை சுமந்துதான் ஆக வேண்டும்! தோனி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது.

dhonis

தலைவர் டிவில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 ஓட்டங்களையும் டுபெலிசிஸ் 62 ஓட்டங்களையும் எடுத்தனர். உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை எடுத்தது. இதனால் தென்னாபிரிக்கா 5 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் ரோகித் சர்மா 150 ஓட்டங்களைக் குவித்தும் எந்த பலனும் இல்லாமல் போனது. மேலும் ரகானே 60 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ரபடா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைபட்டது. ஆனால் தோனியால் வெற்றி இலக்கை எடுக்க முடியவில்லை. 4–வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார்.

வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி தலைவர் தோனி கூறியதாவது:–

பின் வரிசையில் களம் இறங்கும் போது பழியை சுமந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் நிறைய போட்டிகளில் வெற்றியை தேடி தந்து இருந்தாலும், அதை விட தோல்வி அடைந்த ஆட்டத்தை தான் மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது என்பது சூதாட்டம் போன்றதே. சில நேரங்களில் கை கொடுக்கும். சில சமயம் கை கொடுக்காது. ஆனால் அணியின் இந்த பொறுப்பை நான் ஏற்று இருக்கிறேன்.

தென்னாபிரிக்காவை 260 முதல் 270 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் பந்து வீச்சு கடைசி நேரத்தில் சரியாக அமையவில்லை. அஸ்வின் காயத்தால் 6 ஓவர்கள் வரை வீச முடியாமல் போனது அணிக்கு பாதகமே.

கடைசி ஓவரில் என்னால் சிறப்பாக ஆட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே.

வெற்றி குறித்து தென்னாபிரிக்க தலைவர் டிவில்லியர்ஸ் கூறியதாவது:–

இம்ரான்தாகிர் வீசிய ஆட்டத்தின் 47–வது ஓவர் திருப்பு முனையாக அமைந்தது. இந்த ஒரே ஓவரில்தான் ரோகித் சர்மாவும், ரெய்னாவும் ஆட்டம் இழந்தனர். கடைசி ஓவரை ரபடா மிகவும் அருமையாக வீசினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்த ஆட்டம் இரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 2–வது ஆட்டம் இந்தூரில் எதிர்வரும் 14–ம் திகதி இடம்பெறவுள்ளது.

Related Posts