Ad Widget

பல்கலை மாணவர் கைது தொடர்பில் ஜேவிபி, முன்னிலை சோஷலிச கட்சியினரிடம் மனோ கணேசன் கோரிக்கை!

பரமலிங்கம் தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெயன், சண்முகம் சொலமன் உள்ளிட்டயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள் அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதே இவர்கள் மீது சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டு ஆகும். இது தொடர்பிலேயே கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் வன்முறை பதட்டநிலை நிலவியது.

யுத்தத்திலும், போராட்டத்திலும் மாண்டவர்களை நினைவுகூறும் உரிமை தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு, இத்தகைய கைதுகளும், வன்முறைகளும் வடக்கில் நடைபெறுகின்றன.யுத்தத்திலும், போராட்டத்திலும் மாண்டவர்களை நினைவுகூரும் உரிமை, தமிழ் மக்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இருக்க வேண்டும்.

1971, 1989 ஆகிய ஆண்டுகளில் கொல்லப்பட்ட உங்களது தோழர்களை நினைவுகூருவதற்கு தென்னிலங்கையில் உங்களுக்கு இருக்கின்ற உரிமை, தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.ஆயுதம் இல்லாமல் அமைதியாக நினைவு அனுஷ்டானங்களை நடத்துவதற்கு தமிழர்களுக்கு இருக்கின்ற உரிமையை நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும். கொல்லப்பட்ட தமிழ் போராளிகளின் அரசியல் நோக்கங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். அதை நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் மரணமடைந்தவர்களை நினைவுகூறுவதற்கு தமிழர்களுக்கு உள்ள உரிமையை நீங்கள் ஏற்றுக்கொண்டு தென்னிலங்கையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இது நடைபெறாதவரைக்கும், யாழ் மாணவர்களும், இளைஞர்களும் கைது செய்யப்படுவதும், கடத்தப்படுவதும் நிற்க போவதில்லை.எனவே தெற்கில் கொல்லப்பட்ட உங்கள் தோழர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்திவரும் கட்சிகள் என்றமுறையில், உடனடியாக இதுபற்றி உங்கள் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிவியுங்கள், என மக்களை விடுதலை முன்னணி (ஜேவிபி), முன்னிலை சோஷலிச கட்சி ஆகிய கட்சியினருக்கு, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்பியிடமும், முன்னிலை சோஷலிச கட்சி பிரச்சார செயலாளர் புபுது ஜாகொடவிடமும் இன்று காலை நேரடியாக தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், தமது கட்சிக்குள்ளே இதுபற்றி கலந்தாலோசனை செய்வதாக உறுதியளித்ததாகவும், முன்னிலை சோஷலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட, தமது கட்சி மாண்டவர்களை நினைவுகூரும் தமிழ் மக்களின் உரிமையை ஏற்றுகொண்டிருப்பதாகவும், அதை நாளை நடைபெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் தாம் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்ததாக மேலும் கூறினார்.

Related Posts