Ad Widget

பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பல்கலைக்கழகத்திற்கு 2016-2017ம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய கற்கை நெறிகள் பல ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 50 இனால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏனைய கற்கைநெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படையாக அதிகரிக்கப்படும் என்றும் 2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் அதற்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த கைநூல் தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும் இந்த கைநூல் மற்றும் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கான தகவல்கள் குறித்து ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான புதிய வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இம்மாதம் 10ம் 11ம் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர்களுக்கான செயலமர்வுக்காக 25 மாவட்டங்களில் இருந்து 350 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.மும்மொழிகளிலும் விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளதோடு இவ்வாறான ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கல்வி ஆண்டுக்கு மாணவர்களைப் பதிவு செய்தல் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் அனைத்தும் இணையத்தளங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

Related Posts