Ad Widget

பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருப்பது கொள்கைக்கு மாறானது

பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருப்பது கொள்கைக்கு மாறானது. அவ்வாறான தலையீடுகள் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்குத் தடையாக அமையும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகக்குழு கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை (14) நடைபெற்றது.

அது தொடர்பாக, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரனை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியாக பேரவைக்கு நியமிக்கப்பட்ட வெளிவாரி அங்கத்தவர்களின் நிலை மற்றும் பேரவை அங்கத்தவர்கள் எவ்வாறு நியமிக்கப்பட வேண்டும் என்பது பற்றி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.

பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்பது எமது கோரிக்கையாக இருந்து வந்தது. ஆட்சி மாறும் போது, ஒரு கட்சி போக மறுபடியும் இன்னொரு கட்சியின் தலையீட்டுடன் பேரவையை நியமிப்பது கொள்கைக்கு மாறானதாக அமையும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின்படி இதுவரை பேரவை அமைக்கப்படவில்லை. எனவே இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பேரவைக்கு யாரை நியமிக்க வேண்டும் என ஒரு நிரலை தெரிவு செய்து ஆசிரியர் சம்மேளனத்தின் ஊடாக உயர்கல்வி அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்புவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் இருந்த வெளிவாரி அங்கத்தவர்கள் சிலர் சிறப்பாக செயற்பட்டாலும் கட்சியூடாக வந்த காரணத்தால் அரசியல் ரீதியாக கட்சியின் கொள்கைகளை கேட்க வேண்டி நிலை இருந்தது. இதனால் பல்கலைக்கழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கு இடம்கொடுக்க முடியவில்லை. பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக இயங்க முடியாமல் இருந்தது.

வெள்ளிக்கிழமை (16) கொழும்பில் இடம்பெறவுள்ள ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts