Ad Widget

பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகிலுள்ள படைமுகாம்களை அகற்றும் இராணுவம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் நிகழ்வு நடைபெறவுள்ள ஆலயத்தினை சூழவும், அதனை அண்மித்தும் உள்ள படை முகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவ முகாம்கள் அகற்றப்படும் பகுதிகள் உட்பட மேலும் சில ஏக்கர் காணிகள் ஜனாதிபதி, பிரதமரின் உத்தரவின் பேரில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கென சில கணக்கெடுப்பு நடவடிக்கைகளும் மாவட்ட செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts