Ad Widget

பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாது தண்டனைக்கு உட்பட்டதாலேயே திருடினோம் – சிறுவர்கள் சாட்சியம்

judgement_court_pinaiகிளிநொச்சி பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தான்.

கிளிநொச்சி பூநகரி பள்ளிக் குடா பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரு வீடுகளில் சுமார் ஏழரைப்பவுண் நகை மற்றும் சிறு தொகைப்பணம் என்பவற்றை களவாடிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 13 வயது, 14 வயதான இரு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து சில பொருள்களை பொலிஸார் மீட்டிருந்தனர். இரு சிறுவர்களையும் பொலிஸார் கடந்த வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னிலையில் முற்படுத்தியிருந்தனர்.

சிறுவர்கள் சார்பாக சட்டத் தரணிகளான எஸ்.விஜயராணி, எஸ்.சிவபாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையாகி வாதாடினர். இதன் போது குறித்த சிறுவர்கள், சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான குற்றத்தை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு செய்யவில்லை. குடும்ப வறுமை காரணமாகவே செய்துள்ளனர்.

இவர்களை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினூடாக அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது அந்த இரு சிறுவர்களும் மன்றில் தமது நிலையை தெரிவித்தனர். தாம் பூநகரி பள்ளிக்குடா விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருவதாகவும், குடும்ப வறுமை காரணமாக, பாடசாலையில் கோரப்படும் பரீட்சை கட்டணத்தை செலுத்த முடியாது போனதாகவும். அதனால் தம்மை ஆசிரியர்கள் தண்டித்து வீட்டுக்கு திரும்பியதாகவும் இதன் காரணமாகவே தாம் திருட வேண்டிய சூழல் ஏற்பட வேண்டியதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த இரு சிறுவர்களையும் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள சான்று பெற்ற நன்நடத்தை பாடசாலையில் இணைக்கு மாறும், பிள்ளைகளின் நலன்களில் அக்கறை செலுத்தாத இரு சிறுவர்களினதும் பெற்றோரை மன்றில் முற்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த 13 வயதுச் சிறுவனின் தாயார், மற்றும் இரு சகோதரர்கள் இறுதிப் போரில் உயிரிழந்து விட்டனர் என்றும் தந்தையே சிறுவனை வளர்த்து வருவதாகவும், மற்றைய சிறுவனின் தாயார் அண்மையில் தற்கொலை செய் துள்ளார் எனவும் இதனால் அந்த சிறுவனும் தந்தையின் வளர்ப்பிலே உள்ளான் என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

Related Posts