Ad Widget

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தது.

பின்னர் 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க இருவரும் திணறினார்கள்.

இந்தியா 4-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ஸ்கோர் 13 ரன்னாக இருக்கும்போது 1 ரன் எடுத்த நிலையில் தவான் வில்லே பந்தில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வில்லே பந்தில் க்ளீன் போல்டானார்.

4-வது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த டோனி 6 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 11.5 ஓவரில் 63 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

5-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி நிதானமாக விளையாட கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். விராட் கோலி 93 பந்தில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் தனது 27-வது சதத்தை பதிவு செய்தார். கேதர் ஜாதவ் 65 பந்தில் 11 பவுண்டரிகள், 2 சிக்சருடன் தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்தியாவின் ஸ்கோர் 36.2 ஓவரில் 263 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 122 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 105 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். கோலி அவுட்டாகிய சிறிது நேரத்தில் கேதர் ஜாதவ் 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் 76 பந்தில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் இந்த ரன்னைக் குவித்தார்.

இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இருவரும் அவுட்டாகும்போது இந்தியா 39.5 ஓவரில் 291 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 61 பந்தில் 60 ரன்கள் தேவைப்பட்டது.

7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் கவனமாக விளையாடினார்கள். குறிப்பாக ஹர்திக் பாண்டியா தனது அதிரடியை மறந்து ஒன்றிரண்டு ரன்கள் என ஓடி ஓடி ரன்கள் சேர்த்தார். ஜடேஜா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 44.1 ஓவரில் 318 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 35 பந்தில் 33 ரன்கள் தேவைப்பட்டது.

ஹர்திக் பாண்டியாவுடன் அஸ்வின் இணைந்தார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அனுபவம் இருந்ததால் அஸ்வின் சிறப்பாக விளையாடினார். அதேசமயம் ஹர்திக் பாண்டியாவிடம் ஒவ்வொரு ரன்னாக எடுத்தால் போதும் என்று அறிவுரை கூறி அவருக்கு நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இதனால் இந்தியா வெற்றியை நோக்கி சென்றது.

48-வது ஓவரை ரஷித் வீசினார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 18 பந்தில் 12 ரன்கள் தேவையிருந்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா இமாலய சிக்ஸ் விளாச இந்தியாவின் வெற்றி உறுதியானது.

அடுத்த ஓவரின் முதல் பந்தை அஸ்வின் சிக்சருக்கு தூக்க இந்தியா 48.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா 37 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்களுடனும், அஸ்வின் 10 பந்தில் 1 சிக்சருடன் 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி 19-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

Related Posts