Ad Widget

பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் அரசாங்கத்தின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளன- சுமந்திரன்

அமைச்சரவைப் பதவியேற்பில் பறக்கவிடப்பட்ட கொடிகள் இந்த அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மத விவகாரங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது நல்ல விடயம் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவத்தில் பயன்படுத்தப்பட்ட கொடி இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது.

எனவே, இந்த அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்கு சார்பாக உள்ளவர்களுக்கும் வாக்களித்த தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் உடனடியாக தமது தீர்மானத்தை மீண்டும் நினைத்துப்பார்க்க வேண்டும்.

தேசியக் கொடிகளில் இருந்தே இரண்டு சமூகங்களைக் குறிக்கின்ற வரிகளை விலக்கி, பாரதூரமான விடயத்தை மேற்கொண்டு அந்தளவுக்கு இனக் குரோதத்தோடு செயற்படுகின்றவர்களுக்குத்தான் எமது மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதனை நினைவில் கொள்ளவேண்டும். அத்துடன், வைபவத்தில் பௌத்த குருமார்களுக்குத்தான் இடங்கொடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆனால், அமைச்சிலே மற்றைய சமயங்கள் தொடர்பாக எதுவும் சொல்லப்படாமை குறித்து எனக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது.

என்னுடைய சிந்தனைப்படி, நாடு சமய சார்பற்ற நாடாக இருக்கவேண்டும். அரசியலானது சமய நிறுவனங்களுக்குள்ளே நுழையக்கூடாது. அது அந்த சமயங்களுக்குத்தான் பாதிப்பு. ஆகவே பௌத்த மதத்தைப் பாதுகாக்கப்போகிறோம் என்று சொல்லி பிரதம மந்திரி அதையெல்லாம் தூக்கி மடியில் வைத்திருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. பௌத்த மதம் பாதிக்கப்படும்.

ஆனால், நல்ல விடயம் மற்ற மதங்களில் கைவைக்காமல் அதனை சுயாதீனமாக இயங்க விடுவது நல்லது. ஆகவே, அந்த விதத்தில் பிரதம மந்திரியின் அமைச்சுக்குக் கீழ் ஏனைய மதங்கள்பற்றி சொல்லப்படாமல் இருப்பது நல்ல விடயம்.

இதேவேளை, ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் 19ஆவது திருத்தம் விலத்தப்படக்கூடாது. இந்த 19ஆவது திருத்தம் ஜனநாயகத்தை நாட்டில் முழுமையாக நிறைவேற்றுவதற்கு அரைவாசித் தூரம் வந்த விடயம்.

எனினும், அரைவாசித் தூரம் என்பதால் இந்தத் திருத்தத்தில் நடைமுறைக்குச் சாத்திமில்லாத சில விடயங்கள் இருக்கின்றன. ஏனென்றால் அது அரைகுறையாக செய்யப்பட்டது.

அவற்றை நிவர்த்திசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நிவர்த்தி செய்யலாம். ஆனால், அந்தத் திருத்தத்தை முற்றிலுமான மாற்றவேண்டும் என முயற்சிப்பது, நாட்டில் ஜனநாயக்த்தை குழிதோண்டிப் புதைக்கிற 18ஆவது அரசியலமைப்பு செய்ததை செய்வதாக இருக்கும். அதற்கு எந்த ஜனநாயகவாதியும் ஆதரவு கொடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts