பணிநிறுத்தத்தை கைவிட்டு புதிய போராட்டத்தில் குதித்த தனியார் பேருந்து ஊழியர்கள்!

அனைத்து இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள், பணிநிறுத்த போராட்டத்தை கைவிட்டு, சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தங்களது பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை முன்வராத நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேருந்து உரிமையாளர்களின் அச்சுறுத்தலை தொடர்ந்தே ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக அனைத்து இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குமாரரத்ன ரேணுகா தெரிவித்தார்.

இதேவேளை, வீதியில் வெள்ளைக் கோட்டை தாண்டி முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்வதை தவிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பேருந்து உரிமையாளர்கள், ஊழியர்கள் குறித்து அக்கறை காட்டுவதில்லை என்றும், மாறாக அவர்களது நாளாந்த வருமானம் குறித்த மாத்திரமே அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Posts