Ad Widget

பணத்திற்கு காணியை வழங்காவிட்டால் இரண்டையும் இழக்கும் நிலை உருவாகும்: கடற்படை!

அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள காணிகளை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் பலவந்தமாகக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இம்முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்போது அம்மக்களுக்கு பணத்தாசை காட்டி காணியைக் கைப்பற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதன்படி, அண்மையில் மன்னார் – வங்காலைக் கிராமத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த 5 வருடங்களாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த காணியை 20 இலட்சம் ரூபா தருகிறோம். அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறு உரிமையாளரை கடற்படையினர் அச்சுறுத்தியதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த காணியை அளவிடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டதையடுத்து உரிமையாளரால் மன்னார் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் காணி உரிமையாளர்கள் மற்றும் கடற்படையினரிடம் கலந்துரையாடியுள்ளனர்.

இதனையடுத்து, வங்காலை கடற்படை அதிகாரி, மன்னார் கடற்படை அதிகாரி மற்றும் உரிமையாளர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, காணியை விற்க உரிமையாளர் மறுத்துவிட்டதாகவும், காணியைப் பணத்திற்குத் தராவிட்டால் காணியையும் பணத்தையும் இழக்கநேரிடும் என கடற்படையினர் எச்சரித்துள்ளதாகவும் காணி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts