Ad Widget

பட்டப்பகலில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து கத்திமுனையில் கொள்ளை – புதைத்து வைத்த நகைகளையும் மிரட்டி எடுத்தது கும்பல்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இரண்டு வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் இருவர் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடித்துத் தப்பித்துள்ளனர்.

சின்னப்பா வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், அங்கு வசிக்கும் வயோதிபர்களை கத்திகளைக் காண்பித்து மிரட்டி தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.
கொள்ளையர்கள் இருவரும் ஜக்கட் அணிந்து முகத்தை துணியால் மறைத்து வந்தனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் ஆனைக்கோட்டை, கூழாவடியில் வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் இருவர், அங்கு வசிக்கும் வயோதிபர்களை கத்தி முனையில் மிரட்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 17 பவுண் நகைகளை அகழ்வு செய்து எடுத்ததுடன் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பித்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயோதிபர்கள் இருவரும் தம்மிடம் நகைகள் எவையும் இல்லை என்று கூறிய போது, அங்கு இருந்த ஒளிப்பட அல்பத்தைக் காண்பித்து, அதில் வயோதிப் பெண் அணிந்திருந்த நகைகள் எங்கே என்று கொள்ளையர்கள் சித்திரவதை செய்துள்ளனர்.

சித்திரவதை தாங்க முடியாமல் வீட்டுக்குள் ஒரு இடத்தில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை வயோதிபர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அதனை அகழ்ந்து நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அலுமாரியில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 7 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவங்கள் இரண்டு தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டும் ஆனைக்கோட்டையில் திருமண நிகழ்வு நடந்த வீட்டுக்குள் இரவு புகுந்த கொள்ளையர்கள், திருமண நிகழ்வு காணொலியைக் காண்பித்து நகைகளைக் கொள்ளையிட்டிருந்தனர். அந்தக் கொள்ளைச் சந்தேக நபர்கள் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts