Ad Widget

படைகளுக்கு காணிகள் சுவீகரிப்பு முழுவீச்சில்; யாழ்.காணி அலுவலகம் மும்முர செயற்பாட்டில்; பகிரங்க அறிவித்தல்களும் மக்களின் பார்வைக்கு

jaffna_kachari_newமக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் பணிகளைத் தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

யாழ்.மாவட்டத்தில் படையினரால் கோரப்பட்ட பெருமளவு தனியார் காணிகளைச் சூவீகரிக்கும் பகிரங்க அறிவித்தல்கள் இந்த மாதம் யாழ்.மாவட்டக்காணி சூவீகரிப்பு அலுவலகம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன.

மக்களின் பார்வைக்காக இந்த அறிவித்தல்கள் இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் அதன் யாழ்.மாவட்ட காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தினூடாக யாழ்.மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்றும், அதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வைத்து திறப்பு விழாவின் போது கூறியிருந்தார்.

அத்துடன் பொதுமக்களின் காணிகளை படையினர் சுவீகரிக்கமாட்டார்கள் என்றும், அதற்காக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் மேற்படி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு ஒரு மாத காலம் கடப்பதற்குள், யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் படையினர் கோரிய தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்குரிய நடவடிக்கைள் முழுவீச்சாக இந்தக் காணி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“காணி எடுத்தல் சட்டத்தின் (அத்.460) 2ஆம் பிரிவின் கீழ் அறிவித்தல்” என்ற தலைப்பில் யாழ்.மாவட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமியின் ஒப்பந்தத்துடன் இந்த அறிவித்தல்கள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகளில் ஒரு சில பிரதேச செயலகங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலகங்களில், படையினர் தனியார் காணிகளைக் கோரியிருந்தனர்.

படையினர் கோரிய மேற்படி காணிகளுக்குரிய இடங்களிலேயே இந்த அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. காணி உரிமையாளரின் பெயர் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகக் காணி சுவீகரிக்கப்படும் விவரம் என்பன இந்த அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளின் உரிமையாளர்கள் படையினருக்குக் காணி வழங்க மறுப்புத் தெரிவிப்பதாக இருந்தால், விசாரணையின் போதே அதனைத் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. 14 நாள்களின் பின்னரே விசாரணை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்பாதுகாப்பு வலயப் பகுதியினுள் உள்ளடங்கும் தனியார் காணிகளின் சுவீகரிப்புத் தொடர்பில் பகிரங்க அறிவித்தல் விடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது,

“அரச காணிகள் தொடர்பான விடயத்தை ஆளுநர் கையாள்கின்றார். தனியார் காணிகள் தொடர்பான விடயத்தை யாழ்.மாவட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் காணி சுவீகரிப்பு அதிகாரி கையாள்கின்றார். இது தொடர்பில் பூரணமான தகவல்கள் என்னிடம் இல்லை’ எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக காணி சுவீகரிப்பு அலுவலர் ஆ.சிவசுவாமியிடம் கேட்டபோது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது என அவர் மறுத்துவிட்டார்.

Related Posts