யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான பகிடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அம் மாணவனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும், பகடிவதைக்கெதிராக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளக் கோரியும் அம் மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவரின் தந்தையே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், முறைபாடு செய்தவரின் மகனை தலைக்கவசத்தால் தாக்கியதாகவும், இதனால் அந்த மானவனின் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக்கிய பின்னர், தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்ட பின்னர், கூகுள் வரைபட உதவியுடன் பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்பியூலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேறகொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறு கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
 
					



 
												
							 
												
							 
												
							 
												
							 
												
							