Ad Widget

நேற்று மாகாண அவையில் என்னதான் நடந்தது?

வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வான 15 ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நேற்று கைதடியில் உள்ள மாகாண சபைபயின் கட்டத்தில் நடைபெற்றது.

விசேட அமர்வு என்ற அடிப்படையில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகிய அமர்வு 12 மணிக்கு முடிவுற்றது. நேற்றய அமர்வில் அவைத்தலைவரது அறிவித்தல்கள் மற்றும் உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் ஏனைய சில உறுப்பினர்களுடைய பிரேரணை மற்றும் வாய்மூல வினாக்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

நேற்றய அமர்வு புதிய செயலாளருடன் ஆரம்பமாகியமை சிறப்பானதொன்றாகும். இதன்போது இதுவரை செயலாளராக இருந்த கிருஸ்ணமூர்த்திக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உறுப்பினர் லிங்கநாதன் அவர்களால் சபை சார்பில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது நிதி நியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றுச்சட்டம் என்பன ஆளுநர் மீண்டும் திருத்தங்களுக்கு உட்படுத்தி அனுப்பி வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

அதன்படி நிதிநியதிச்சட்டம் மற்றும் முத்திரை கைமாற்றுச்சட்டம் ஆகியவற்றில் மீண்டும் 3திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் அதனை செய்து முடித்தால் விரைவில் குறித்த 2 சட்டத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சபைக்கு தெரியப்படுத்தினார்.

எனினும் நிதிநியதிச்சட்டம் தொடர்பில் முழுவிபரங்களும் ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையுடன் திருத்தங்கள் செய்யுமாறு ஆளுநரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 21 ஆம் திகதி அமர்வில் திருத்தங்களுடன் 23பிரிவுகளாக பிரித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிலும் மேலும் 3 திருத்தங்கள் உள்ளதாக முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவருக்கு ஆளுநர் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதனையடுத்து நேற்று குறித்த மூன்று சிறிய திருத்தங்களையும் முடித்து விரைவில் சட்டமாக்க வேண்டும் என்ற எங்களுடைய இலக்கிற்கு அமைய ஆளுநருக்கு அனுப்பி வைப்பதாக முதலமைச்சர் அங்கீகாரம் வழங்கினார்.

அத்துடன் ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட முதலமைச்சர் நிதியம் தொடர்பிலும் நேற்றய அமர்வில் அறிவிக்கப்பட்டது. எனினும் முதலமைச்சர் நிதியத்தை கொண்டு வந்தே தீருவோம் என முதலமைச்சர் , அவைத்தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் ஆணித்தரமாக தெரிவித்தனர்.

எவ்வாறு இந்த சட்டத்தை அமுல்ப்படுத்தலாம் என்பதை ஆளுநரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவுள்ளதாக அவைத்தலைவர் சபையில் தெரிவிக்க உடனடியாக எழுந்த முதலமைச்சர் இதனை நீங்கள் தனிப்பட்ட ரீதியில் கேட்கலாமே தவிர உத்தியோக பூர்வமாக கேட்பது எனக்கு சரியாக படவில்லை என்றும் தெரிவித்தார்.

அதனையடுத்து உறுப்பினர் சர்வேஸ்வரன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோரும் முதலமைச்சருக்கு ஆதரவாகவே உரையாற்றினார். இதனையடுத்து அதனை ஏற்றுக் கொள்வதாக அவைத்தலைவர் தெரிவித்தார்.

மேலும் ஆளுநருடன் தனக்கு நெருங்கிய தொடர்புகள் இல்லை என்றும் இதுவரை நேரடியாக 3 தடவைகள் மட்டுமே பேசினேன் என்றும் தொலைபேசியில் இதுவரை பேசவில்லை என்றும் பெரும்பாலும் கடிதங்கள் மூலமே பேசுவேன் என்றும் தெரிவித்தார். அத்துடன் தமிழ் தேசிய வாதத்தை இறுக்கமாக பின்பற்றும் நாங்கள் எப்போதும் எங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

காணி அமைச்சர் என்ற ரீதியில் வடக்கு மாகாணங்களில் காணிப்பகிர்தளிப்பு மற்றும் இந்தியன் வீட்டுத்திட்டம் தொடர்பில் தற்போதைய நிலை குறித்து தெரியப்படுத்தமாறு முதலமைச்சரிடம் வாய் மொழி வினாவினை உறுப்பினர் லிங்கநாதன் முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், குறித்த விடயங்கள் குறித்து மாவட்டச் செயலர்கள் பதில் எதனையும் வழங்கவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை நினைவூட்டல் விடுத்து அடுத்த கூட்டத்தில் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

மேலும் உறுப்பினர் அனந்தி தெரிவிக்கையில்,

அண்மையில் விபத்து ஒன்றினையடுத்து டிப்பர் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் சிலரைக் கைது செய்யுதுள்ளனர் . மேலும் பலர் சரணடைந்துள்ளதாக அறிகின்றோம். இதனைவிட குறித்த பகுதியில் உள்ள மற்றைய இளைஞர்களையும் பொலிஸார் துன்புறுத்தி வருவதாக பலர் முறையிட்டுள்ளார். அதனைவிட வேறு பல இடங்களில் நடைபெற்ற விபத்துக்கு உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததில்லை. ஆனால் குறித்த விபத்துக்கு மட்டும் பொலிஸார் விரைந்து செயற்பட்டதுடன் தடையங்களையும் அழித்துள்ளனர்.

இவ்வாறு இவர்களுடைய பொறுப்பற்ற தன்மையினாலும் நியாயமற்றவிதத்தாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர் எனவே பொலிஸ் அதிகாரம் எம்மிடம் இல்லை என்றாலும் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன்,

போக்குவரத்து அமைச்சுக்குரிய நியதிச்சட்டம் அமைக்கப்பட்டு அதனை செம்மையாக்க தகுதி வாய்ந்த ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அது இதுவரை முடிக்கப்படவில்லை எனவே முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு முடிக்கப்படும் இடத்து அடுத்த அமர்வில் நியதிச்சட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படும். மேலும் போக்குவரத்துப் பொலிஸார் தங்களுடைய கடமையினைச் சரியாக செய்வதில்லை.

அனுமதிப்பத்திரம் இல்லாத பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதை தடுக்குமாறு வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரிடம் அறிவித்துள்ளேன். மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீண்ட நாட்களுக்கு இழுபட்டு வந்த உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் திருத்தப்பட்ட பிரேரணையில் ஒரு பிரேரணை நேற்றும் கட்சியின் மீளாய்வுக்காக எதிர்வரும் அமர்வான 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலாவது பிரேரணையான தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் என்று முன்வைக்கப்பட்டது.

எனினும் அது இனப்படுகொலை என்ற சொல்லினால் கட்சியின் மீளாய்வுக்கு விடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்ததையடுத்து நேற்றும் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது பிரேரணையான இலங்கை அரசு ஐ.நா சபையுடன் ஒத்துழைக்க வேண்டும் என இச்சபை கோருகிறது என்று பிரேரிக்கப்பட்டது. இதனை உறுப்பினர் ரவிகரன் வழிமொழிந்தார்.

மேலும் உறுப்பினரின் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து பலர் உரையாற்றினர். குறித்த பிரேரணையின் அவசியத்தையும் எடுத்து விளக்கினர். சபையில் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் தவநாதன் குறித்த பிரேரணையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அரசு விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதன் பின்னர் இந்தப் பிரேரணை அவசியம் அற்றது என்று தெரிவித்தார்.

அதற்கு உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் அரசு குறித்தும் ஈ.பி.டி.பி குறித்தும் காட்டமான பதில்களை வழங்கி குறித்த பிரேணை சரி என்பதை நிரூபித்தனர்.

மேலும் உரையாற்றிய சிவாஜிங்கம்,

இனப்படுகொலை என்ற விடயம் சரி என்று தான் கூறவேண்டும். ஏனெனில் பெரும்பாலான கலவரங்களில் தமிழ் மக்கள் மட்டும் தான் கொல்லப்பட்டனர். இதனை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமிர்தலிங்கம் காலம் தொட்டு தமிழரசுக் கட்சியின் மாநாடு வரை இனப்படுகொலை பற்றிப் பேசப்பட்டது.

அப்படி இருக்கும் போது இனப்படுகொலைக்கு இன்னும் முடிவு வரவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கும் பயப்படுகின்றதா என்று கேள்வியெழுப்பினார்.

இதற்குப்பதிலளித்த முதலமைச்சர் நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. எனினும் நாங்களாகவே இனப்படுகொலை என்று முடிவு செய்வதை விட தீர்வு வேறு யாரிடமாவது இருந்து கிடைத்தால் அதன் பெறுமதி பெரிதாக இருக்கும் என தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ப.நோ.கூ சங்க மோசடிகள் குறித்து நடவடிக்கை எடுங்கள் விந்தன் கோரிக்கை

தீவுப்பகுதியில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் மோசடி இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது எனவே குறித்த விடயம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts