Ad Widget

கறுப்பின விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா காலமானார்

245px-Nelson_Mandela-2008_(edit)நெல்சன் மண்டேலா காலமாகிவிட்டார். அறக்கும்போது அவருக்கு வயது 95. மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.

மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் அவர் இறக்கும் தருவாயில் இருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, நெல்சன் மண்டேலா அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார்.

1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது

மேலும் தகவல்களுக்கு

Related Posts