நெடுந்தூரப் பேருந்து நிலையம் இயங்கத் தொடங்கியது!!இ.போ.ச வராததால் பயணிகள் சிரமத்தில்!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த நேர அட்டவணையின் கீழ் (Combined Timetable) ஆரம்பமாகும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்திருந்தார்.

எனினும், இன்று காலை முதல் தனியார் பேருந்துகள் மட்டுமே புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திற்கு வந்து சேவையைத் தொடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) பேருந்துகள் இந்த நிலையத்திற்கு வராமல், வழக்கம் போலத் தங்களது சொந்த நிலையத்திலிருந்தே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாகப் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

சுமார் 134 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு நீண்டகாலமாகப் பயன்பாடின்றி முடங்கிக்கிடந்த இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவதற்குப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை தோல்வியிலேயே முடிந்தன.

இதனைத் தொடர்ந்து, வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கௌரவ நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த இணைந்த நேர அட்டவணை முறைமை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு மற்றும் அதிகாரசபையின் அறிவிப்பை ஏற்றுத் தனியார் பேருந்துகள் புதிய நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்துள்ள போதிலும், இ.போ.ச பேருந்துகள் ஒருங்கிணைந்த சேவைக்கு வர மறுத்து தனித்துச் செயல்படுவது பயணிகளுக்குப் பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts