Ad Widget

நெடுங்கேணிப் பகுதியில் காடழிக்கப்பட்டு புத்தர்சிலை அமைப்பு – மக்கள் விசனம்!

வவுனியா வடக்கு – ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தர்சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நெடுங்கேணி பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனர்.

இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபையின் உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

“நெடுங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை மீள குடியேறாதபோதும் அங்குள்ள விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் இன்றளவும் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் திடீரென பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அங்கு விவசாயம் செய்வதற்காக செல்லும் மக்கள் கூறியதை தொடர்ந்து நாம் சென்றிருந்தோம்.

அங்கு நடுக்காட்டுக்குள் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பௌத்த பிக்கு ஒருவரும் அவருக்கு காவலாளிகள் இருவர் வழங்கப்பட்டு 3 பேர் தங்கி யிருக்கின்றனர்.

அந்த விகாரையைச் சுற்றிலும் காடுகள் வெட்டப்பட்டு சிறிய கொட்டில்கள் போடப்பட்டு அங்கு பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது குறித்து வனவள திணைக்களம் எந்த விதமான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்புவாய்ந்தவர்கள் இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்.

அதன் ஊடாகவே தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts